நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு
கிணத்துக்கடவில் தொடர் மழையால் நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் தொடர் மழையால் நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோடை மழை
கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடைகாலம் தொடங்கியதால், பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. ஆனாலும் இரவில் கோடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தரிசாக கிடந்த நிலங்களை விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது விவசாயத்துக்கு தயார்படுத்தி வருகின்றனர்.
மேலும் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் சூலக்கல், சென்னியூர், ஆதியூர், சொக்கனூர், நெம்பர் 10 முத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் முன்கூட்டியே மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பொரியல் தட்டை பயறு, நிலக்கடலை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
விளைச்சல் அதிகரிக்கும்
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் கோடைமழை பெய்தது. இதன் காரணமாக மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் பயிரிட்டுள்ள நிலக்கடலை, பொரியல் தட்டை பயிறு, பச்சை மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்டவை பச்சை பசேலென்று வளர்ந்து காட்சி அளித்து வருகிறது.
தொடர்ந்து கோடை மழை பெய்யும் பட்சத்தில் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சாகுபடி தீவிரம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு கோடைகாலத்தின்போது கிணத்துக்கடவு பகுதியில் போதிய மழை பெய்யாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கோடைமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதன் காரணமாக நிலக்கடலை, பொரியல் தட்டை பயிறு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறோம். மேலும் பயிர்களும் நல்ல நிலையில் வளர்ந்து வருகிறது. இன்னும் கோடைமழை தொடர்ந்து பெய்தால், விளைச்சல் அதிகரிக்க ஏற்றதாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.