விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி திடீர் ஆய்வு
விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி திடீர் ஆய்வு;
விழுப்புரம்
திருச்சி விதை பரிசோதனை நிலைய விதைப்பரிசோதனை அதிகாரி மனோன்மணி விழுப்புரத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தின் பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதை மாதிரிகளில் விதைகளின் முளைப்புத்திறன் சோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை, பிறரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதுவரை சான்றுவிதை மாதிரிகள் 174 எண்களும், ஆய்வாளர் விதை மாதிரிகள் 48 எண்களும், பணி விதை மாதிரிகள் 82 எண்களும் ஆக மொத்தம் 304 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் 25 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டன. இதையடுத்து பரிந்துரைக்கப்பட்ட அளவிலான புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலவைகளின்றி உள்ள விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்க செய்வதே விதை பரிசோதனை நிலையத்தின் முக்கிய நோக்கம் என்பதை விதைப்பரிசோதனை அலுவலர் மனோன்மணி வலியுறுத்தியதோடு பெறப்படும் விதை மாதிரிகளை உரிய நேரத்தில் சீரிய முறையில் பகுப்பாய்வு செய்து தரமான விதைகளே விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சந்தோஷ்குமார், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.