தலைமையாசிரியர், போக்சோ சட்டத்தில் கைது
நாகை அருகே, 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வெளிப்பாளையம்:
நாகை அருகே, 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த வலிவலம் ஊராட்சியில் காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தகட்டூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(வயது58) என்பவர் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார். இந்த பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து உனது பெற்றோரிடம் தெரிவித்தால், அருகில் உள்ள குளத்தில் உன்னை தள்ளி கொன்று விடுவேன் என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து கொண்டு மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமலும், பள்ளிக்கு செல்லாமலும் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் ஆடியோ
பள்ளிக்கு செல்லாதது குறித்து சிறுமியின் தாயார், அவரிடம் கேட்டுள்ளார். அப்போது மாணவி, பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண் தனது மகளுக்கு நடந்த கொடுமையை வாட்ஸ்அப் மூலம் ஆடியோ வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோவை கேட்ட நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
போக்சோவில் தலைமையாசிரியர் கைது
விசாரணையில், சிறுமிக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் பேரில் பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டம், காம விரோதமாக பேசுதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வனை பணியிடை நீக்கம் செய்து கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.