காரனூர் ஏரியில் மீன்பிடி திருவிழா பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்துச் சென்றனர்
கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது. பொதுமக்கள் போட்டி, போட்டு மீன்களை பிடித்துச் சென்றனர்.
கச்சிராயப்பாளையம்,
மீன்பிடி திருவிழா
கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் கிராமத்தில் ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரிக்கு கோமுகி அணையில் இருந்து தண்ணீர் வரும். இந்த ஏரி மூலம் காரனூர், குதிரைச்சந்தல், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர ஆண்டுதோறும் ஏரியில் குத்தகைதாரர் மூலம் ஏராளமான மீன்கள் வளர்க்கப்படும். அதன்பிறகு குத்தகைதாரர் மீன்களை பிடித்துச் சென்ற ஒருமாதம் கழித்து ஏரியில் உள்ள மீதமுள்ள மீன்களை பொதுமக்கள் பிடித்துச் செல்ல ஏதுவாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
போட்டி, போட்டு...
அதன்படி நேற்று காரனூர் ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது, கள்ளக்குறிச்சி, காரனூர், குதிரைச்சந்தை, நல்லாத்தூர், மட்டியக்குறிச்சி, சடையம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கூடை, வலை, துணிகளுடன் ஏரிக்குள் இறங்கி மீன்களை போட்டி போட்டு பிடித்துச் சென்றனர். இதில் கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, கட்லா போன்ற பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டது.