குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைப்பு
தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.
திட்டச்சேரி:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.
குடிநீர் குழாயில் உடைப்பு
நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருமருகல்- மருங்கூர் சாலையில் கரையிருப்பு வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் சேகல், மருங்கூர், நெய்குப்பை, கண்ணமங்கலம் வழியாக கீழ்வேளூர், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கரையிருப்பு ஆற்றின் பாலத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறி ஆற்றில் கலந்து வீணாகி வந்தது. இதனால் சேகல், மருங்கூர், நெய்குப்பை, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்தது.
சீரமைப்பு
உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் பிரசுரமானது.
இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்ைப சரி செய்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்தனர். இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.