பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு- கலெக்டர் லலிதா
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக கலெக்டர் லலிதா கூறினார்.
பொறையாறு:-
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக கலெக்டர் லலிதா கூறினார்.
அரவை அலகு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நெகிழி (பிளாஸ்டிக்) அரவை அலகினை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி இங்கு நெகிழி அரவை அலகு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் செலவில் தொடங்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம், செவ்வந்தி மகளிர் சுயஉதவி குழுவிடம் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் இதுவரை ரூ.1 லட்சம் வரை லாபம் ஈட்டி உள்ளனர்.
வேலைவாய்ப்பு
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இருந்து தினமும் ஊராட்சி தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்காத குப்பைகள் அரவை அலகிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு அரைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் ஊரக பகுதியில் தார்ச்சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், சுயஉதவி குழுவில் உள்ள பெண்களுக்கும் தினசரி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முருகண்ணன், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, முடிகண்டநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் லலிதா, பிளாஸ்டிக் அரவை குறித்த செயல் விளக்கத்தை மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் கேட்டறிந்தார்.