டிப்பர் லாரி மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலி
காவேரிப்பாக்கம் அருகே டிப்பர் லாரி மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலியானார்.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கி புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 70), விவசாயி. இவர் நேற்று பாகவெளி பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சைக்கிளில் சென்று, அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சுமைதாங்கி அருகே வரும்போது, அந்த வழியாக பின்னால் வந்த ஒரு டிப்பர் லாரி திடீரென ராதாகிருஷ்ணனின் சைக்கிள் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.