காரிமங்கலம் அருகே சூறாவளி காற்றுடன் கனமழை; மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து சேதம்

காரிமங்கலம் அருகே சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன.

Update: 2022-05-08 12:00 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன.

சூறாவளி காற்றுடன் மழை

காரிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

இந்த நிலையில்  நேற்று இரவு 7 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. 45 நிமிடம் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பெரியாம்பட்டி, கோவிலூர், அடிலம், முருக்கம்பட்டி, இண்டமங்கலம், சப்பாணிபட்டி, காளப்பனஅள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

இதில் காளப்பனஅள்ளி பகுதியில் இருந்த மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்) காற்றில் தூக்கி வீசப்பட்டது. மேலும் 400-க்கும் மேற்பட்ட மாட்டு கொட்டகைகள் சரிந்து விழுந்தன.

இருளில் மூழ்கிய கிராமங்கள்

இந்த நிலையில் கோவிலூர் ஊராட்சியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், மாடு ஒன்று பரிதாபமாக இறந்தது. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியவை சேதமடைந்ததால் 5 ஊராட்சிகளில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கின. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்தநிலையில் இன்று காலை முதல் சேதமடைந்த மின் கம்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு சீரமைக்கும் பணி மின்வாரிய கோட்ட பொறியாளர் அருண் பிரசாத், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்