26 மாதங்களுக்கு பிறகு சென்னை-ரீ யூனியன் தீவு இடையே மீண்டும் விமான சேவை - ‘வாட்டர் சல்யூட்’ கொடுத்து உற்சாக வரவேற்பு

26 மாதங்களுக்கு பிறகு சென்னை-ரீ யூனியன் தீவு இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது. முதல் விமானத்தை ‘வாட்டர் சல்யூட்’ கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2022-05-08 07:31 GMT
ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் ரத்து ஆகின. அதில் முக்கியமானது சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தளமான ரீ யூனியன் என்ற குட்டி தீவான செயிண்ட் டெனிஸ் என்ற இடத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏா்ஆஸ்ட்ரல் விமானம் ஆகும். 

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சென்னை வந்துவிட்டு, மறுநாள் சனிக்கிழமை மீண்டும் செயிண்ட் டெனிஸ் புறப்பட்டு செல்லும். பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அருகே உள்ள இந்த குட்டி தீவின் மொத்த மக்கள் தொகையே 1.5 லட்சம் தான். ஆனால் இது சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலா தளம். இங்கு புகழ்பெற்ற கோவில்கள், மியூசியம், மற்றும் கோடை வாசஸ்தளங்கள் இருப்பதால், பல்வேறு நாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் பெருமளவு இங்கு வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக இது வா்த்தக தளமாகவும் உள்ளது. அங்கு உள்ளவா்களில் கணிசமாக தென்இந்தியா்கள், தமிழ்நாட்டை சோ்ந்தவா்களும் உள்ளனா். எனவே சென்னைக்கு இயக்கப்பட்ட இந்த வாராந்திர விமான சேவைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல், 26 மாதங்களாக இந்த விமான சேவை ரத்தாகி இருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருமளவு குறைந்து இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் இந்த விமான சேவையை ஏா் ஆஸ்ட்ரல் விமான நிறுவனம் தொடங்கியது. இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் அதற்கு அனுமதி அளித்தது.

26 மாதங்களுக்கு பின்பு, முதல் விமானம் நேற்று முன்தினம் இரவு முதல் விமானம் 43 பயணிகள், 6 விமான ஊழியா்களுடன் செயிண்ட் டெனிசில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.சென்னையில் தரையிறங்கி ஓடுபாதைக்கு விமானம் வந்ததும் ஓடுபாதையின் 2 புறமும் தீயணைப்பு வண்டிகள் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து ‘வாட்டர் சல்யூட்’ கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் விமானத்தில் வந்த பயணிகளையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனா். இந்த விமான சேவை தொடங்கியதும் சுற்றுலா பயணிகள் இடையே மகிழ்ச்சியை அளித்தது.

இந்த விமானம் வழக்கம்போல நேற்று காலை மீண்டும் சென்னையில் இருந்து ரீ யூனியன் தீவில் உள்ள செயிண்ட் டெனிஸ்க்கு 64 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த விமான சேவை இனிமேல் வழக்கம்போல் வாராந்திர விமான சேவையாக தொடா்ந்து இயங்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறினா்.

மேலும் செய்திகள்