கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி - போலீசார் விசாரணை

சென்னை புளியந்தோப்பில் பெண் தற்கொலை முயற்சிக்கு கந்தவட்டி தான் காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2022-05-08 05:25 GMT
திரு.வி.க.நகர்,  

சென்னை புளியந்தோப்பு டிகஸ்டர் சாலையில் வசித்து வருபவர் சித்ரா (வயது 53). இவரது கணவர் நாகராஜ் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். கொரோனா காலத்தில் கணவருக்கு வேலை இல்லாததால் சித்ரா அதே பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்பவரிடம் சிறுக, சிறுக ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அசலும், வட்டியும் செலுத்த முடியாத நிலையில் வட்டி அதிகரித்து ரூ.35 லட்சம் தர வேண்டும் என ரங்கநாயகி கூறி சித்ராவின் வீட்டை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் தன் உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இந்த நிலையில், சித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த சித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தற்கொலை முயற்சிக்கு கந்தவட்டி தான் காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்