போலி பாஸ்போா்ட் வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

போலி பாஸ்போா்ட் வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-08 04:57 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சிவராமன் (வயது 29) என்பவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தபோது, அவர் கடந்த 5 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி என்று தெரியவந்தது.

இதையடுத்து சிவராமனை தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். திருச்சி கியூ பிராஞ்ச் போலீஸ் சூப்பிரண்டு கடந்த 2017-ம் ஆண்டில் சிவராமனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமான நிலையங்களிலும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் சிவராமன் மீது திருச்சி கியூ பிராஞ்ச் சி.ஐ.டி. போலீசாா் நவீன மின்னணு சாதனங்கள் மூலம் போலி பாஸ்போா்ட்கள் தயாரிப்பது, உண்மையான பாஸ்போா்ட் என்று ஏமாற்றுவது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளாக தேடப்பட்டவா், குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது சென்னை விமான நிலையத்தில் சிக்கிய தகவலை திருச்சி கியூ பிராஞ்ச் போலீசாருக்கு குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து திருச்சி கியூ பிராஞ்ச் தனிப்படை போலீசாா் சென்னை வந்து சிவராமனை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துச்சென்றனா்.

மேலும் செய்திகள்