மேட்டூர் அணை நீர்மட்டம் 106.30 அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் 106.30 அடியாக உயர்ந்தது.;
மேட்டூர்:
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அவ்வப்போது பெய்வதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 245 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 531 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் 106.15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 106.30 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்தால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.