சமையல் கியாஸ் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது- இல்லத்தரசிகள் குமுறல்
சமையல் கியாஸ் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என இல்லத்தரசிகள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈரோடு
சமையல் கியாஸ் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என இல்லத்தரசிகள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிர்ச்சி
நாடு முழுவதும் விலைவாசி உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மறைமுகமாக அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் சமையல் கியாஸ் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியது. தற்ேபாது கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,000-ஐ தாண்டி உள்ளது.
இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் இந்த விலை உயர்வால் ெகாதிப்படைந் துள்ளனர்.
இதுபற்றி ஈரோட்டை சேர்ந்த இல்லத்தரசிகள் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டு, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
கலைவாணி
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடைய மனைவி கலைவாணி என்பவர் கூறியதாவது:-
நானும் எனது கணவரும் கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். நாங்கள் 2 பேரும் வாங்கும் கூலி உணவுக்கே போதாத நிலை உள்ளது. குழந்தைகளுக்கு படிப்பு, வீட்டு வாடகை என்று பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டும் கியாஸ் விலை உயர்வு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழைகள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தயவு கூர்ந்து கியாஸ் விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகேஸ்வரி
ஈரோடு குமலன்குட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மனைவி மகேஸ்வரி என்பவர் கூறியதாவது:-
எனக்கு 55 வயதாகிறது. எங்கள் வீட்டில் கியாஸ் இணைப்பு வாங்கியபோது சிலிண்டர் விலை ரூ.45 ஆக இருந்தது. இப்போது ரூ.1,000-த்தை தாண்டி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட 500 ரூபாய்க்கும் குறைவாகவே இருந்த கியாஸ் விலை இப்போது கட்டுப்பாடு இல்லாமல் உயர்த்தப்படுகிறது. இது குடும்பத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாங்கள் வாழ வேண்டும் என்றால் கியாஸ் விலை உள்பட அனைத்து விலைவாசி உயர்வையும் திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுதமி
ஈரோடு பூந்துறை பூவாண்டிவலசு பகுதியை சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவருடைய மனைவி கவுதமி (வயது 32) என்பவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு இலவச பஸ்கள் இயக்குகின்றன. ஆனால், வீட்டில் வேலை செய்து விட்டு வேலை பார்க்கும் இடத்தில் வரவேண்டிய நேரத்துக்கு வரவேண்டும் என்றால் அந்த பஸ்களை நம்ப முடியாது. இதற்காக 2 சக்கர வாகனங்கள் ஓட்டினால், பெட்ரோல் போட முடியாத அளவுக்கு விலை உயர்ந்து விட்டது. இப்போது சமையல் கியாசும் கடுமையாக உயர்ந்து விட்டது. இப்படியே போனால் பெட்ரோலுக்கும், கியாசுக்கும் கூட நாங்கள் சம்பாதிக்கும் கூலி போதாது. எங்களை போன்றவர்களின் நிலையை கருதியாவது விலைவாசியை குறையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீதா ராமசாமி
கருங்கல்பாளையத்தை சேர்ந்த கீதா ராமசாமி (33) என்பவர் கூறியதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் ரூ.350-க்கும் விற்பனையானது. அப்போது நான் வாங்கிய ஊதியத்தில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஆனால், கியாஸ் விலை 300 சதவீதத்துக்கும் அதிகம் உயர்ந்து விட்டது. ஒரு சிலிண்டர் கியாஸ் 30 நாட்கள் முதல் 40 நாட்கள் வரைதான் வருகிறது. ஒரு நாளைக்கு கியாசுக்காக மட்டுமே எவ்வளவு செலவழிப்பது. இப்படியே சென்றால் ஏழைகள், நடுத்தர மக்களின் பாடு திண்டாட்டம்தான். எனவே அரசு நடவடிக்கை எடுத்து விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடும்ப பெண்கள் மட்டுமின்றி, குடும்ப தலைவர்களும் கியாஸ் விலை உயர்வால் கலக்கம் அடைந்து உள்ளனர். வீட்டு வாடகை, பெட்ரோல், உணவு, படிப்பு என்று அத்தனை செலவுகளையும் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்ப தலைவர்களின் தலையில் இன்னொரு பாரமாக இது உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.