போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காளை மாடு சிலை- நாடார் மேடு இடையே மேம்பாலம் அமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காளைமாடு சிலைக்கும், நாடார் மேடு பகுதிக்கும் இடையே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-05-07 21:56 GMT
ஈரோடு
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காளைமாடு சிலைக்கும், நாடார் மேடு பகுதிக்கும் இடையே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வாகன நெரிசல்
ஈரோடு மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எந்த சாலையில் சென்றாலும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் வாகன நெரிசல் உள்ளது.
ஈரோடு மாநகரில் பெருந்துறை ரோடு, சத்தி ரோடு என்று அனைத்து ரோடுகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பூந்துறை ரோடு பகுதியும் மூலப்பாளையம் பகுதிக்கு பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், ஈரோடு காளைமாடு சிலை முதல் மூலப்பாளையம் வரை இந்த ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. குறிப்பாக ஈரோடு நகரில் இருந்து வாகனங்கள் வெளியே செல்லும் காளைமாடு சிலை ரெயில்வே மேம்பாலம் பகுதியில் 24 மணி நேரமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது.
மேம்பாலம் வேண்டும்
இங்கு ரெயில்வே பாலத்துக்கு அடியில் தரைதளத்துக்கும் கீழ் பள்ளம் தோண்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் குறுகியதாகவும் இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளன. தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இந்த கோரிக்கை சேர்க்கப்பட்டு இருந்தது.
ரெயில்வே பால நுழைவுப்பாதையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. கோரிக்கை வைத்து உள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
விரைவான தீர்வு
இதுபற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
ஈரோட்டில் திடீர் என்று வாகன நெரிசல் ஏற்படும். அது ஏன் என்று பார்த்தால் காளைமாடு சிலை அருகே உள்ள ரெயில்வே நுழைவுப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுதான் காரணமாக உள்ளது. இந்த நுழைவுபாலத்தில் ஏற்படும் நெரிசல் காளைமாடு சிலை, காந்திஜி ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, பிரப் ரோடு என்று பஸ் நிலையம் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ரெயில்வே நுழைவு பாதையில் ஒரு மாட்டு வண்டி அல்லது அதிக பாரம் ஏற்றிய ஒருவாகனம் சென்றால் சில நிமிடங்களிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், மழை பெய்து நுழைவுபாதையில் தண்ணீர் தேங்கினாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
எனவே ஈரோடு காளைமாடு சிலையில் இருந்து நாடார் மேடுவரை அல்லது மூலப்பாளையம் -கரூர் ரோடு பிரிவு வரை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு போக்குவரத்து நெரிசலுக்கு விரைவான தீர்வு காண தமிழக அரசும் அதிகாரிகளும் முன்வர வேண்டும்.
நேற்று இரவு ஈரோட்டில் திடீர் என்று பெய்த மழையில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள் குறிப்பாக 2 சக்கர வாகனங்களில் சென்றவர்கள் முழுவதும் மழையில் நனைந்தனர். 15 நிமிடத்துக்கும் மேலாக மெதுவாக ஊர்ந்து சென்றுதான் அந்த பகுதியை கடக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு குறுகலான சாலை மட்டுமே காரணம். இதுபோல் பூந்துறை ரோட்டில் இருந்து வந்த லாரிகளை கொல்லம்பாளையத்திலேயே நிறுத்தி போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். எனவே இங்கு மேம்பாலம் கட்டுவதே தீர்வாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்