கோதையாற்றின் தெப்பக்கடவில் மீண்டும் பாலம் கட்டப்படுமா?
திற்பரப்பு-கடையல் இடையே கோதையாற்றின் குறுக்கே தெப்பக்கடவில் மீண்டும் பாலம் கட்டப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குலசேகரம்:
திற்பரப்பு-கடையல் இடையே கோதையாற்றின் குறுக்கே தெப்பக்கடவில் மீண்டும் பாலம் கட்டப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெப்பத்தில் பயணம்
கடையல் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டாவிளை, செங்குழிக்கரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் திற்பரப்பு மற்றும் குலசேகரத்துக்கு எளிதில் சென்றுவர அந்த பகுதியில் ஓடும் கோதையாற்றை கடந்து செல்ல வேண்டும். இதற்காக முன்பு கடையல் பேரூராட்சி சார்பில் கோதையாற்றில் மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட தெப்பம் இயக்கப்பட்டு வந்தது. இந்த தெப்பத்தில் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் மறு கரைகளுக்கு சென்று பயன்பெற்று வந்தனர்.
மழைக்காலங்களில் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தெப்பத்தில் பயணம் செய்வது ஆபத்தானதாகவே இருந்தது.
இரும்பு பாலப்பணி
இந்தநிலையில் அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டுமென்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய திருவட்டார் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஜாண் ஜோசப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பொதுநிதி என மொத்தம் ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன்படி கோதையாற்றின் குறுக்கே தெப்பக்கடவு பகுதியில் இரும்பு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
வெள்ளத்தில்...
ஆனால், 2008-ம் ஆண்டு பணிகள் முடிவடையும் முன்பே கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கட்டப்பட்டு வந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் பாலம் கட்டும் பணிகள் நடைபெறாமல் கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே திற்பரப்பு-காமூர் பகுதியில் கோதையாற்றின் குறுக்கே ஒரு நடைக்கல் என்ற இடத்தில் மற்றொரு உயர் மட்டப்பாலம் கட்டப்பட்டது.
தொடர் கோரிக்கை
ஆனாலும், தெப்பக்கடவு பாலம் என்பது மக்கள் அத்தியாவசிய தேவையாகவே இருந்து வருகிறது. இந்த பாலம் அமைந்தால் கடையல் பேரூராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களான காட்டாவிளை, செங்குழிக்கரை, அம்பாடி போன்ற இடங்களில் வசித்து வரும் 500 குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கும், திற்பரப்பு-குலசேகரம் பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் ரப்பர் பால் வடிப்பு தொழிலாளர்களுக்கும் இது வரப்பிரசாதமாகவே இருக்கும்.
எனவே, தெப்பக்கடவில் சேதமடைந்து கிடக்கும் இரும்பு பாலத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.