நெல்லை மாவட்டத்தில் இன்று 2137 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை மாவட்டத்தில் இன்று 2137 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2022-05-07 20:35 GMT
நெல்லை:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அலை பரவல் அச்சம் ஏற்பட்டு இருப்பதால் தடுப்பூசி போடுவதற்கு மீண்டும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நெல்லை மாநகராட்சி பகுதியில் 266 சிறப்பு முகாம்கள் மற்றும் 18 நடமாடும் குழுக்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 700 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். 9 நகர்ப்புற சுகாதார மையங்கள், கலெக்டர் அலுவலகம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் வீடு, வீடாக சென்று 2-வது தவணை விடுபட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதுதவிர 9 யூனியன் பகுதிகளில் 1,734 முகாம்கள், 137 நடமாடும் குழுக்கள் என 1,853 முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. ஒட்டுமொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 2,137 சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி அரசுடன் இணைந்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட மக்களை ஊக்கப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் டெல்லியை சேர்ந்த ஐ.எஸ்.ஏ.பி. இந்தியா என்ற அமைப்பு சார்பில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் களப்பணியாளர்களுடன் விழிப்புணர்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். மேலும் குறும்படங்களையும் ஒளிபரப்பு செய்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஊக்கப்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்