விறகு அடுப்புக்கு மாறும் இல்லத்தரசிகள்

சமையல் கியாஸ் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியதால் விறகு அடுப்புக்கு இல்லத்தரசிகள் மாறும் நிலை உள்ளது.

Update: 2022-05-07 20:16 GMT
விருதுநகர், 
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து நேற்று முதல் அமலானது. தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பதால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு கியாஸ் சிலிண்டர் ரூ.1,000-ஐ தாண்டியது. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள் ெதரிவித்த கருத்துகள்:- 
ஆயிரத்தை தாண்டியது 
விருதுநகரை சேர்ந்த செல்வமீனா:- 
மத்திய அரசு திடீரென நேற்று கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தியது. அனைத்து குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. தற்போதைய நிலையில் அனைத்து குடும்பத்தினருக்கும் வீடுகளில் சமையலுக்கு அடிப்படை ஆதாரமாக இருந்து வரும் நிலையில் கடந்த 10 மாதங்களில் 6 தடவை  விலையை உயர்த்தியுள்ளது குடும்பத்தலைவியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலையில் சிலிண்டர்விலை ரூபாய் ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஒருபுறம் மத்திய அரசு இலவச  சிலிண்டர் வழங்குவதாக தெரிவித்து வரும் நிலையில் மறுபுறம்  சிலிண்டர் விலையை உயர்த்துவது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே மத்திய அரசு இந்த விலை உயர்வு நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ள நிலையில், கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டை குறைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் மத்திய அரசு அதன் விலையை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
விறகு அடுப்பு 
சிவகாசியை சேர்ந்த பேச்சியம்மாள்:-
கடந்த 3 மாதங்களில் கியாஸ் விலை மூன்று முறை உயர்ந்து தற்போது ரூ1049.50-க்கு  கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து கியாஸ் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதித்துள்ளனர். முன்பெல்லாம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கியாஸ் விலை உயரும். ஆனால் தற்போது மாதத்திற்கு ஒரு முறை அதாவது 28 நாட்களுக்கு ஒருமுறை கூட கியாஸ் விலை உயர்த்தப்படுகிறது. இப்படியே கியாஸ் விலை உயர்ந்து கொண்டே சென்றால் நடுத்தர மக்கள் விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். 
மறு பரிசீலனை 
வத்திராயிருப்பை சேர்ந்த மாலா:- கியாஸ் விலை உயர்வால் அன்றாட கூலி வேலை செய்யும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மனதில் கொண்டு மத்திய அரசு இந்த கியாஸ்  சிலிண்டர் விலையை குறைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.
நடுத்தர குடும்பம் 
தாயில்பட்டியை ேசர்ந்த நிர்மலா:- 
நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஏற்கனவே  சிலிண்டர் விலை அதிகம் காரணமாக சிரமப்பட்டு வருகின்றோம். சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை சிலிண்டருக்கு ஒதுக்கி விடுகிறோம். தற்போது மேலும் ரூ. 50 கூடியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் கூடுவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் சிலிண்டர் விலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. 
நிதி சுமை 
கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த சங்கீதப்பிரியா:-  தற்போது கியாஸ் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை உயர்வு மூலம் பொதுமக்கள் மீது கடுமையான நிதி சுமையை சுமத்துகின்றனர்.
பொருளாதார நெருக்கடி 
கீழராஜகுலராமனை சேர்ந்த செண்பகவல்லி:-
சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் பயன்பாடு இல்லாத வீடே இல்லை எனலாம். இந்த நிலையில் சிலிண்டரின் விலையை மேலும் ரூ.50 உயர்த்தியதன் மூலம் குடும்பத் தலைவிகள் மிகவும் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் மீண்டும் பழைய காலத்தை போல விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

மேலும் செய்திகள்