நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.

Update: 2022-05-07 20:06 GMT
நெல்லை:
சித்திரை திருவிழா
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் பல்வேறு பூஜைகள், வீதி உலா, சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6.50 மணிக்கு சுவாமி, அம்பாள் வருசாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு சுவாமி -அம்பாள் தேரில் எழுந்தருளினர். 10.45 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கோவில் செயல் அலுவலர் சுந்தரசிவன், தாசில்தார் சண்முக சுப்பிரணியன், போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதியில் சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று தீர்த்தவாரி
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-வது திருநாளில் காலை 10 மணிக்கு சுவாமி -அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் தாமிரபரணி ஆற்றில் எழுந்தருளுகிறார்கள். அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பைரவர் பூஜை நடக்கின்றது.

மேலும் செய்திகள்