சூறாவளி காற்றுடன் பலத்த மழை
தாயில்பட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.;
தாயில்பட்டி,
தாயில்பட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
பலத்த மழை
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் ேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
தாயில்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, மண்குண்டம்பட்டி, மடத்துப்பட்டி, சத்திரப்பட்டி, வனமூர்த்திலிங்காபுரம், கோமாளி பட்டி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 1½ மணி நேரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றினால் விளம்பர பலகைகள் ரோட்டில் சாய்ந்தன.
போக்குவரத்து பாதிப்பு
வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்த விளம்பர பலகை சாய்ந்து ஆட்டோ சேதமானது. வனமூர்த்தி லிங்காபுரம், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்த மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. இதனால் சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாற்றுப்பாதை இல்லாததால் பட்டாசு ஆலை தொழிலாளர்களும் பணி முடிந்து வாகனங்களில் செல்ல முடியாமல் 1 மணி நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது.
3 மணி நேரம் மின்தடை
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெம்பக் கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் தடை செய்யப்பட்டது. இதனால் வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.