அதிகாரியை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

அதிகாரியை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

Update: 2022-05-07 19:47 GMT
சமயபுரம், மே.8-
ச.கண்ணனூர் பேரூராட்சியில்  15 வார்டுகள் உள்ளன. நேற்று காலை சமயபுரம் பகுதியில் உள்ள குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அள்ளிக்கொண்டிருந்தனர். இதனிடையே அங்கே எரிந்துகொண்டிருந்த குப்பைகளை அள்ளுமாறு சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி கூறியதாக தெரிகிறது. அதற்கு பணியாளர்கள் குப்பை எரிந்து கொண்டிருப்பதால் வெப்பம் அதிகமாக உளளது. பக்கத்தில் செல்ல முடியவில்லை. மேலும், அதிலிருந்து வரும் புகையினால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. அதனால், எரிந்து முடிந்த பின்பு சுத்தம் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பணியாளர்களுக்கும் சுகாதார ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்களை தகாத முறையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த துப்பரவு பணியாளர்கள் தரக்குறைவாக பேசிய சுகாதார ஆய்வாளரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் காலை 8.30 மணி வரை நடைபெற்றது. தகவல் அறிந்த செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இனி, இதுபோல் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்