புதைபடிவ பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

புதைபடிவ பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-07 19:20 GMT
பெரம்பலூர்:
தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 3,481 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. அரசு டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் திட்டத்தின் மூலம் தற்போது வரை 20,285 பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். மேலும், 15 திருநங்கைகள், 183 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு டவுன் பஸ்களில் பயணச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஏழை, எளிய குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கிய திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 561 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.73.42 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் தொன்மையை விளக்கும் வகையில் புதைபடிவ பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்படும் நிலையில் உள்ளது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,153 விவசாயிகளுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான மின் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் ரூ.115 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
முன்னதாக அவர் தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்