கறிக்கோழி குஞ்சுகளை வளர்க்க விவசாயிகள் மறுப்பு
கறிக்கோழி குஞ்சுகளை வளர்க்க விவசாயிகள் மறுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் கறிக்கோழி குஞ்சுகளை வளர்ப்பதற்காக விவசாயிகளிடம் வழங்கி, அதற்கு பராமரிப்பு தொகையாக 1 கிலோ கறிக்கோழிக்கு ரூ.6.50 வழங்கி வருகின்றனர். ஒரு கோழி 40 நாட்களில் 1½ முதல் 2 கிலோ வரை எடை கொண்டதாக வளர்ச்சிபெறும். இதற்கு ஆகும் செலவு தற்போது உள்ள விலைவாசி உயர்வு காரணமாகவும், ஆட்களுக்கான சம்பளம், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றுக்கான செலவால் நஷ்டம் ஏற்படுவதாகவும், எனவே 1 கிலோ கறிக்கோழிக்கு 12 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கூறி அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள 5 தனியார் நிறுவனங்களின் மேலாளர்களிடம் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இனி கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்காக பெறமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் கறிக்கோழி வளர்ப்பு தொழில் பாதிக்கப்படும் நிலையில், கறிக்கோழி இறைச்சி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.