எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் உள்பட 5 பேர் கைது
வாலிபரை கத்தியால் வெட்டிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
கத்தியால் வெட்டினர்
புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது இம்ரான் கான் (வயது 22) என்பவர் மோட்டார் சைக்கிளை மறித்து, அவர்களிடம் தீப்பெட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் சேர்ந்து இம்ரான் கானை சரமாரியாக தாக்கினர்.
மேலும் கத்தியால் வெட்டி, கட்டையால் அடித்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட 5 பேரையும் பிடித்தனர். இதில் 3 பேர் 17 வயதுடையவர்கள், மற்றொருவர் 15 வயதுடையவர் ஆவார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். மற்றொருவர் முகமது கனி (24) ஆவார். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களில் சிறுவர்களை திருச்சியில் உள்ள காப்பகத்தில் அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டதில் இந்த சம்பவம் நடந்ததாக கூறினர்.