கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ திருவிழா இன்று தொடக்கம்
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கம்பம் நடும் விழாவுடன் தொடங்குகிறது.
கரூர்,
கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா
கரூர் மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதனையொட்டி கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு பூஜை செய்வதும், விழாவின் இறுதியில் பக்தர்கள் புடைசூழ அந்த கம்பத்தினை ஊர்வலமாக எடுத்து சென்று அமராவதி ஆற்றில் விடுவதும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கம்பம் நடும் விழாவுடன் தொடங்குகிறது.
இதனையொட்டி கோவில் முன்பு பந்தல் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 13-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. 15-ந்தேதி காப்புகட்டுதலும், 23-ந்தேதி மாரியம்மன் திருத்தேரோட்டமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
நேர்த்தி கடன்கள்
மேலும் 22, 23, 24, 25-ந்தேதிகளில் மாவிளக்கும், பால்குடமும் நடைபெற உள்ளது. 23, 24-ந்தேதி அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் காவடி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்கள் செலுத்தும் விழாவும் நடைபெறுகிறது. வருகிற 15-ந்தேதியில் இருந்து தினமும் ரிஷப வாகனம், புலி வாகனம், பூத வாகனம், வெள்ளி சிம்ம வாகனம், வெள்ளி அன்னவாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை காமதேனு வாகனம், கெஜலட்சுமி வாகனம், புஷ்ப வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், கிளி வாகனம், வேப்பமர வாகனம், பின்னமர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜூன் மாதம் 2-ந்தேதி பஞ்ச பிரகாரமும், 3-ந்தேதி புஷ்ப பல்லக்கும், 4-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. 5-ந்தேதி அம்மன் குடிபுகுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.