ஐ.பி.எல். போட்டி நடந்த மைதானத்தில் சூதாட்டம்- 8 பேர் கைது
ஐ.பி.எல். போட்டி நடந்த மைதானத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையை அடுத்த நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் போட்டி நடைபெறும் மைதான வளாகத்திலேயே சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி போலீசார் மைதானத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2.9 லட்சம் சாதனங்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜ்குமார் (38), தானே, மும்ராவை சேர்ந்த ஆமீர் அலி (24), மும்பை கார் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (38), குஜராத்தை சேர்ந்த ஹார்த்திக் (38), அஜய், ஆந்திராவை சேர்ந்த சந்தீப் (31), திருமலா (29), சீமா சங்கர் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.