சாராய வியாபாரி மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
பண்ருட்டி அருகே சாராய வியாபாரி மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.
கடலூர்,
பண்ருட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் பண்ருட்டி டைவர்ஷன் ரோடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜியாவுதீன் (வயது 48) என்பவரது வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் விற்பனை செய்வதற்காக சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜியாவுதீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கைதான ஜியாவுதீன் மீது 1 கொலை வழக்கு, 5 திருட்டு வழக்குகள், 12 சாராய வழக்குகள் என 18 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு சாராய வியாபாரி ஜியாவுதீனை, தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் பாலசுப்பிரமணியம், ஜியாவுதீனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் உள்ள ஜியாவுதீனிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.