இந்த ஆண்டில் 1,800 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம்- மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,800 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

Update: 2022-05-07 17:46 GMT
கோப்பு படம்
மும்பை, 
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,800 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
1,800 பெண்கள்
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இன்று மும்பை ஹஜ் ஹவுசில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- 
ஹஜ் பயணிகள் இந்த ஆண்டு மானியம் இன்றி பயணம் செய்ய உள்ளனர். எனவே அவர்களுக்கு கூடுதல் செலவு வராமல் பார்த்து கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபியாவில் நியாயமான விலையில் தங்கும் இடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் வழங்க பணிகள் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு ஹஜ் பயண நடைமுறைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 56 ஆயிரத்து 601 இந்திய முஸ்லிம்கள் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். 22 ஆயிரத்து 636 பேர் ஹஜ் குருப் ஏற்பாட்டாளர்கள் மூலமாக செல்கின்றனர். 1,800-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண் துணை (மெஹரம்) இன்றி செல்கிறார்கள்.
கொச்சியில் இருந்து...
இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 83 ஆயிரத்து 140 விண்ணப்பங்கள் வந்து இருந்தன. இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி மூலமாக ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி, டெல்லி, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய 10 இடங்களில் இருந்து பயணிகள் செல்ல உள்ளனர். 
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவை சேர்ந்தவர்கள் கொச்சியில் இருந்து ஹஜ் பயணம் செல்வார்கள்.
 இவ்வாறு அவர் பேசினார்.
மோடி தாக்குதல் படை
தொடர்ந்து முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறுகையில், " பிரதமர் மோடி செல்வாக்கு மிக்க தலைவர். அவர் எந்த சாதி, சமயம் அல்லது பகுதிக்கான தலைவர் அல்ல. அவர் அனைவருக்குமான முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார். ‘மோடி தாக்குதல் படை' கடந்த 2014-ம் ஆண்டு முதல் அவரையும், நாட்டையும் களங்கப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ‘இந்தோ போபியாவால்' பாதிக்கப்பட்ட மலிவான சக்திகள் தற்போது ‘இஸ்லாம்போபியா' பிரச்சினையை எழுப்பி நாட்டை களங்கப்படுத்த திட்டமிட்டு உள்ளது. ஆனால் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. தலீபான் மோகம், ஏக்கத்தை நாம் ஒன்றிணைந்து நசுக்க வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்