வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு தொல்லியல் களப்பயிற்சி
திருப்பத்தூர் அருகே வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு தொல்லியல் களப்பயிற்சி நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் ஏரியூர் அருகேயுள்ள உலகினிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவி ஐஸ்வர்யா, கல்லூரி பேராசிரியர்களுக்கு அளித்த தகவலின் பேரில் முதுமக்கள் தாழிகள் குறித்த களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொட்டக்குண்டன் கண்மாய் கிழக்குப் பகுதியில் கள மேற்பரப்பு ஆய்வு செய்தபோது 20-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான முதுமக்கள் தாழிகள் காணப்பட்டது. ஒரிடத்தில் இதுவரை கண்டிராத பெரிய அளவிலான முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. இதை ஆய்வு செய்த பேராசிரியர்கள் இப்பகுதி கி.மு. 6-ஆம் நூற்றாண்டு காலம் முதல் கி.மு.3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள பெருங்கற்காலமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இப்பகுதி முழுவதும் காணப்படும் பானை ஓடுகள் குறித்தும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள் தனலெட்சுமி, வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பொருள் சார்ந்த தொல்லியியல் களப்பயிற்சி அளித்தனர்.