கஞ்சா வியாபாரி மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்டிய கஞ்சா வியாபாரி மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.
கடலூர்,
வேப்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியாக செல்வோரை கத்தியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, அவரை பிடிக்க முயன்றார். அப்போது அவர், ஆபாசமாக திட்டி, தான் வைத்திருந்த கத்தியால் ரவியின் கையில் வெட்டினார்.
உடனே ரவி, அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தார். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருத்தாசலம் சாத்தியம் காலனியை சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (வயது 26) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கைதான மணிகண்டன் மீது விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மணிகண்டனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் பாலசுப்பிரமணியம், மணிகண்டனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் இருந்த கஞ்சா வியாபாரி மணிகண்டனிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.