தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

பொள்ளாச்சி பகுதியில் தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.

Update: 2022-05-07 17:26 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்புகளை உழவர் ஆர்வலர் குழுக்களாக பதிவு செய்யப்பட்டு வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆதியூரில் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உழவர் ஆர்வலர் குழுக்களை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் அவர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து கலெக்டர் விவசாயிகளுக்கு இடுப்பொருட்களை வழங்கினார். அப்போது சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வேளாண்மை துறை இணை இயக்குனர் சித்ரா தேவி மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

முன்னதாக எஸ்.மேட்டுப்பாளையத்தில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். சீரப்பாளையத்தில் வேளாண் பொறியல் துறை மூலம் கருவிகள் வழங்கப்பட்டன.

ஆய்வுக்கு பிறகு கலெக்டர் சமீரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொப்பரை தேங்காய்

கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி அரசுக்கு கருத்துக்கள் தெரியப்படுத்தப்படும். கோவை மாவட்டத்தில் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

 தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. 

கிலோவிற்கு ரூ.106-க்கு விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்