தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம்
கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரூ.7 லட்சம் திருட்டு
கோவை மேட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற எட்வின் ஜோசப் என்பவரின் காரில் இருந்த ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் திருடப்பட்டது.
கார் பஞ்சரானதாக கூறி, அவரது கவனத்தை திசைத்திருப்பி பணத்தை திருடி சென்றதாக அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தனிப்படை அமைப்பு
தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோரின் உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், தாமோதரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, பழைய குற்றவாளிகளுடன் ஒப்பீட்டு பார்த்து சோதனை செய்தனர்.
4 பேர் கைது
மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் சிவமொக்கா மாவட்டத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதில் அந்த பகுதியைச் சேர்ந்த சீனிவாஸ் (வயது 36), சங்கர் (30), அஜய் பாபு (22), நந்து (20) உள்ளிட்டவர்கள் அடங்கிய கும்பல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை தேடி திரிந்தனர். இந்த நிலையில் ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் நின்றுகொண்டிருந்த சீனிவாஸ், சங்கர், அஜய்பாபு, நந்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.14 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பல இடங்களில் கைவரிசை
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மேட்டுப்பாளையம் பாரிகம்பெனி ரோட்டை சேர்ந்த அயூப்கான் என்பவரின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்தை திருடியதும், காரமடையில் சிகரெட் வியாபாரியின் கவனத்தை திசைத்திருப்பி ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்தை திருடியதையும்,
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் காரின் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்தை திருடியதையும், மேலும் ஆத்தூரில் வங்கியில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் அரிப்பு பொடியை தூவி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
இதேபோன்று இவர்கள் செஞ்சி, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, சத்தியமங்கலம் போன்ற பல்வேறு இடங்களில் தங்கியிருந்தாக தெரிகிறது. அதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் இவர்கள் வேறு எதுவும் திருட்டில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பம் போன்று தங்கியிருந்து திருட்டு
திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குடும்பமாக விடுதியில் வந்து தங்கியிருந்துள்ளனர். பின்னர் அருகில் பணப்புழக்கம், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்களுக்கு சென்று நோட்டமிட்டு, அதிக பணம் வைத்திருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பு பணத்தை திருடுவதை தொழிலாளாக வைத்திருந்தனர்.
போலீசாருக்கு பாராட்டு
திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் போது செல்போன் உபயோகிப்பது இல்லை. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டது.
ஆனாலும் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு 10 நாட்களுக்குள் திருட்டுப்போன மொத்த பணத்தையும் கைப்பற்றி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுகள் தெரிவித்தனர்.