மளிகை கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து ஜோலார்பேட்டை பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜோலார்பேட்டை
தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து ஜோலார்பேட்டை பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு பிரிவு) டாக்டர் செந்தில்குமார் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் நேற்று சந்தைக்கோடியூர் ஒரு பகுதியில் உள்ள கடைகளில் ‘திடீர்’ சோதனை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் பிளாஸ்டிக் பொருள் பதுக்கல் மற்றும் உணவு பாதுகாப்பு தரம் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் ஒரு கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்து இருந்த ஒரு கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதனை அடுத்து அருகாமையில் இருந்த 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து 2 கடைகளிலும் தலா ஒரு கிலோ வீதம் 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, தலா 2 ஆயிரம் வீதம் ரூபாய் என 4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் காலாவதியாகி இருந்த 5 கிலோ ரவை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்கள், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தனர்.