மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யத்தில் பரவலாக மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் பரவலாக மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கத்திரி வெயில்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
உப்பு உற்பத்தியில் தூத்துக்குடிக்கு அடித்தப்படியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கி மழை, அவ்வப்போது விட்டு, விட்டு பெய்ததால் 5 முறை உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் சுட்டெரித்ததால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.
உப்பு உற்பத்தி பாதிப்பு
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் நேற்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பாத்திகளில் உள்ள உப்பை தொழிலாளர்கள் சேகரித்து தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க ஒரு வாரமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.