எண்ணேகொள்புதூர், அலியாளம் அணைக்கட்டு திட்டங்களுக்கு ரூ.289 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன-கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தகவல்
எண்ணேகொள்புதூர், அலியாளம் அணைக்கட்டு திட்டங்களுக்கு ரூ.289 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாக கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களை தேடி மருத்துவம்
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று நேற்றுடன் ஒரு ஆண்டு முடிவடைந்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறைகளை சார்ந்து பல திட்டங்களை தீட்டி, அந்த திட்டங்களின் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி நோயாளிகளின் வீடுகளுக்கே மருத்துவ தன்னார்வலர்கள் நேரில் சென்று அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளை செய்து மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில 2 லட்சத்து 56 ஆயிரத்து 655 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இன்னுயிர் காப்போம் திட்டம்
நோய் வரும் முன்பே காக்கும் வகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி மருத்துவ முகாம்கள் நடத்தி உரிய மருந்துகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நமது மாவட்டத்தில் 30 முகாம்கள் நடத்தப்பட்டு 25 ஆயிரத்து 913 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
மருத்துவ துறை சார்ந்த மற்றொரு திட்டமான ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 அரசு மருத்துவமனைகள், 4 தனியார் மருத்துவமனைகள் மூலம் 1,379 பேர் பயன் அடைந்துள்ளனர்.
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் மூலம் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமது மாவட்டத்தில் 34 ஆயிரத்து 106 மனுக்கள் பெறப்பட்டு, 31 ஆயிரத்து 639 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட கடனில் 1,136 குழுக்களுக்கு ரூ.50 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 62 மாணவர்கள், 7 ஆயிரத்து 994 பெண் தன்னார்வலர்கள், 3 ஆண் தன்னார்வலர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 997 தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர்.
அணைக்கட்டு திட்டங்கள்
6 ஆயிரத்து 848 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. எண்ணேகொள்புதூர் கால்வாய் அணைக்கட்டு திட்டத்திற்கு ரூ.233 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்டு உள்ளது. அதே போல அலியாளம் திட்டத்திற்கு ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த மார்ச்சில் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழக அரசின் ஓராண்டு கால சாதனைகள் குறித்த புத்தகத்தை கலெக்டர் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பெற்று கொண்டார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முருகன், குமரேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், தாசில்தார்கள் சரவணன், ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.