தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
தேனி அருகே துக்கவீட்டுக்கு சென்றிருந்தவர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தேனி:
பூட்டுகள் உடைப்பு
தேனி அருகே நாகலாபுரத்தில் உள்ள தாடிச்சேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி மல்லிகா (வயது 54). வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 5-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சிவகாசி அருகே கோட்டைப்பட்டியில் உறவினர் இறந்த காரியத்துக்கு சென்றார்.
பின்னர் அவர் நேற்று நாகலாபுரத்துக்கு திரும்பி வந்தார். அப்போது அவருடைய வீட்டின் இரும்பு கேட் மற்றும் மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் வெளியே சிதறிக் கிடந்தன.
6 பவுன் நகைகள் திருட்டு
மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்க செயின், கம்மல், மோதிரம் என மொத்தம் 6 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. மல்லிகா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மல்லிகா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகை, கால்தடங்கள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.