நடுக்கடலில் 3 கிலோ தங்கக்கட்டிகள் வீசப்பட்டதா?
நடுக்கடலில் 3 கிலோ கடத்தல் தங்கக்கட்டிகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பனைக்குளம்,
நடுக்கடலில் 3 கிலோ கடத்தல் தங்கக்கட்டிகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கம் கடத்தல்
ராமேசுவரத்திற்கு அருகே இலங்கை கடல்பகுதி உள்ளதால் கடல் வழியாக அவ்வப்போது இலங்கைக்கு கடல் அட்டை, கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது நடக்கின்றன.
தற்போது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ளதால் ஒரு பவுன் தங்கத்தின் விலை அந்நாட்டு மதிப்பில் ரூ.2 லட்சம் வரை விலை உயர்ந்துவிட்டது. இலங்கையில் தங்கத்தின் விலை உயர்வதற்கு முன்பு இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு தங்கக்கட்டிகள் கடத்தப்பட்டன.
இப்போது பொருளாதார நெருக்கடி காரணமாக நிலைமை தலைகீழாக மாறி, இங்கிருந்து இலங்கைக்கு கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி செல்வதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகள் கடத்தி செல்வதாக மத்திய வருவாய் சுங்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினரும், மத்திய வருவாய் சுங்கத் துறையினரும் இணைந்து மண்டபம் அருகே மனோலி தீவு மற்றும் முயல் தீவுக்கும் இடைப்பட்ட கடல்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
கடலில் வீச்சு?
இந்திய கடலோர காவல் படையினரின் ரோந்து கப்பலை கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடலில் வீசி விட்டு தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலில் வீசப்பட்டதாக கூறப்படும் தங்கக்கட்டிகளை நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடிப்பார்த்தும் இதுவரையிலும் சிக்கவில்லை. கடத்தல்காரர்கள் சுமார் 3 கிலோ வரையிலும் தங்கக்கட்டிகளை கடலில் வீசி இருக்கலாம் என்றும் உளவுப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுசம்பந்தமாக மண்டபம் மரைக்காயர்பட்டினம் பகுதியை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக மத்திய வருவாய் சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.