பக்தர்களை அச்சுறுத்திய 20 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
கல்வராயன்மலையில் பக்தர்களை அச்சுறுத்திய 20 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள தகரை காப்புக்காட்டில் பிரசித்திபெற்ற முனியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும், சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதன்படி நேற்று கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவிலுக்கு அருகில் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டு பக்தர்கள் அச்சமடைந்தனர். பயத்துடன் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே இன்றும் அந்த கோவிலை சுற்றி மலைப்பாம்பு வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் வனச்சரகர் கோவிந்தராஜ், வனவர் சின்னதுரை, மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர். அதன்பிறகே பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.