கொடிகள் அகற்றப்பட்டது
குளச்சல் நகராட்சி 17-வது வார்டில் குழந்தை ஏசு காலனி உள்ளது. இந்த காலனியில் அங்கன்வாடி அருகில் உள்ள மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் 6-5-2022 அன்று செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தில் படர்ந்து இருந்த கொடிகளை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாலையோரம் ஆபத்து
ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொலை தொடர்பு வேலைக்காக சாலையோரத்தில் குழி தோண்டப்பட்டது. தற்போது அந்த குழி கடந்த பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு வரும் மாணவ -மாணவிகள் குழியில் விழுந்து ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ. நாகராஜன், ராஜாக்கமங்கலம்.
சாலையில் வீணாகும் குடிநீர்
மறவன்குடியிருப்பு- ஈத்தாமொழி சாலையில் ஒரு பர்னிச்சர் கடை அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் திறக்கும் வால்வு சேதமடைந்து உள்ளது. இதனால், தண்ணீர் வரும் போது சாலையில் குடிநீர் வீணாக பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, குடிநீர் குழாயில் உள்ள சேதத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மைக்கேல் சிகாமணி, மறவன்குடியிருப்பு.
தெருவிளக்கு எரியவில்லை
வேர்க்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லங்குழி சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. அந்த பகுதியில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களிலும், நடந்தும் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, மின்விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங், கல்லங்குழி.
கீழே கிடக்கும் வழிகாட்டும் பலகை
கருங்கல் நியூ ஜங்சன் குறும்பனை திருப்பத்தில் தேங்காப்பட்டணம், மார்த்தாண்டம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையை அடையாளம் காட்டும் வகையில் வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பலகை சாய்ந்து கீழே கிடக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, வழிகாட்டும் பலகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுனில்குமார், கருங்கல்.
துண்டிக்கப்பட்ட பாதை
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈசன்தங்கில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அதை சுற்றிலும் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது தரைப்பாலம் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதன்பின்பு, கால்வாயை கடந்து செல்ல பாதை வசதி இல்லாததால் பக்தர்களும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, கால்வாயில் தரைப்பாலம் கட்டி பாதை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யப்பன், ஈசன்தங்கு.