ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த மழை
அக்னிநட்சத்திர சீசன் நடந்து வரும் நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமேசுவரம்,
அக்னிநட்சத்திர சீசன் நடந்து வரும் நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம்
தமிழகம் முழுவதும் கடந்த 4-ந் தேதி முதல் கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களிலும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்தநிலையில் கத்தரி வெயில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் ராமேசுவரம் பாம்பன் பகுதியில் நேற்று காலை ½ மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக பாம்பன் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் ரோடு பாலத்தின் சாலை முழுவதும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நல்ல மழை
இதேபோல் மண்டபம் முதல் பிரப்பன் வலசை வரையிலும் நல்ல மழை பெய்தது. ராமேசுவரம் முதல் பாம்பன், மண்டபம் வரையிலும் நல்ல மழை பெய்த போதிலும் ராமநாதபுரத்தில் மழை இல்லாததால் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. ராமேசுவரம், பாம்பன் பகுதியில் காலையில் நல்ல மழை பெய்த போதிலும் பகல் நேரத்தில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. கோடை வெயில் தாக்கம் குறையும் வகையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.