ஊட்டி-மஞ்சூர் சாலையில் திடீர் மண்சரிவு
ஊட்டி-மஞ்சூர் சாலையில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டி-மஞ்சூர் சாலையில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோடை சீசன்
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனை அனுபவிக்க வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும், மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளு குளு காலநிலை உள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குதூகலமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இதையொட்டி அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் ஊட்டி-மஞ்சூர் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
திடீர் மண்சரிவு
இதற்கிடையில் இன்று காலையில் ஊட்டி-மஞ்சூர் சாலையில் நொண்டிமேடு பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும் மண் சரிந்து சாலையில் விழுந்து கிடந்தது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், சாலையில் கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அந்த வழியே வாகன போக்குவரத்து சீரானது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சாலையோரத்தில் உள்ள மண்திட்டில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மண் சரிந்து சாலையில் விழுந்து இருக்கிறது. அங்கு மேற்கொண்டு மண் சரிவு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.