வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் கால்நடைகள்

ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதில் வாகன ஓட்டிகளுக்கு கால்நடைகள் சவால் விடுகின்றன.;

Update: 2022-05-07 14:15 GMT
ஊட்டி

ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதில் வாகன ஓட்டிகளுக்கு கால்நடைகள் சவால் விடுகின்றன. 

சாலையில் கால்நடைகள்

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் சொந்த வாகனங்களில் வருகிறார்கள். மேலும் அதிகளவில் ஆட்டோக்கள் இயங்குவதால் சாலைகளில் வாகன போக்குவரத்து மிகுதியாக இருக்கும். இந்த நிலையில் ஊட்டி நகரில் குதிரை, மாடு, ஆடு போன்ற கால்நடைகள் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை, புளுமவுண்டன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றித்திரிகின்றன. 

இதனால் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்லும்போதும், சாலையோர நடைபாதையில் நடந்து செல்லும்போதும் கடும் அவதிப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக நகராட்சி மார்க்கெட்டில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை தின்பதற்காக வரும் கால்நடைகள் சாலைகளில் தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை மிரள வைக்கின்றன. ஒலி எழுப்பியும் வழி விடாமல், போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதில் வாகன ஓட்டிகளுக்கே சவால் விடுகின்றன. 

சில நேரங்களில் சுற்றுலா பயணிகளை கால்நடைகள் தாக்க முயற்சிப்பதால் விபத்தில் சிக்கி விடுகின்றனர். ஊட்டியில் கோடை விழா தொடங்கி உள்ளது. மேலும் மலர் கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் கால்நடைகள் தொந்தரவு அதிகரித்திருப்பது, சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்