கயத்தாறு அருகே பலத்த சூறைக்காற்று; 2 ஆயிரம் வாழைகள் சேதம்
கயத்தாறு அருகே வீசிய பலத்த சூறைக்காற்றால் 2 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.
கயத்தாறு:
கயத்தாறு அருகே வீசிய பலத்த சூறைக்காற்றால் 2 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.
பலத்த சூறைக்காற்று
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 45). இவர் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள தோட்டத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். இதில் 2,500 ஏத்தன் ரக வாழைகள் பயிர் செய்து, அவை இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தன.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.
நஷ்டஈடு வழங்க கோரிக்கை
இதனால் விவசாயி ஆபிரகாம், அவருடைய மனைவி சலோமி ஆகியோர் தனது தோட்டத்தில் அமர்ந்து, சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளை பார்த்து கண்ணீர் விட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “அனைத்து நகைகளையும் வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி விவசாயம் செய்து வந்தோம். வாங்கிய கடனை திருப்பி அடைத்து விடலாம் என நினைத்து இருந்தபோது இப்படி தலையில் கல் விழுந்தது போல உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு வழங்க வேண்டும். மீண்டும் எங்களது குடும்பத்தை வாழ வைக்க அரசு உதவி செய்ய வேண்டும்” என்றனர்.
அத்திமரப்பட்டி
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியில் நேற்று மதியம் மழையுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. இதனால் அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், காலாங்கரை, வீரநாயக்கன் தட்டு, பொட்டல்காடு பகுதிகளில் நன்கு விளைந்திருந்த வாழைகள் சரிந்து விழுந்தன. இது அந்த பகுதியில் உள்ள விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் விவசாய சங்க தலைவர் திருமால் கூறுகையில், “அத்திமரப்பட்டி பகுதியில் வாழைக்கு ஏக்கருக்கு 1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். குத்தகைக்கு எடுத்தவர்கள் ஒரு லட்சத்து 80 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவு செய்துள்ளார்கள். இந்த வருடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வாழைக்கு தேவையான தண்ணீர் கிடைத்ததால் வாழைகள் நன்கு வளர்ந்திருந்தன. இதனால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தற்போது காற்று பலமாக வீசி ஏராளமான வாழைகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகளான நாங்கள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளோம். எனவே அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.