தேநீர் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
கோவில்பட்டியில் தேநீர் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டரங்கில் தேநீர் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர். மாரியப்பன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், “தேநீர் கடைகளில் அரசு தடை செய்த பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தக்கூடாது. பார்சல் தேனீருக்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது. தின்பண்டங்களை திறந்த நிலையில் ஈ மொய்க்காத அளவில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தின்பண்டங்களை அச்சிடப்பட்ட பேப்பர்களில் கொடுக்காமல், வாழைஇலையில் கொடுக்க வேண்டும். அரசு தடை செய்த புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. தரமில்லாத தேயிலை பயன்படுத்தக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும். தேநீர் கடைக்காரர்கள் இந்த அறிவுரைகளை ஏற்று ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார். கூட்டத்தில் கோவில்பட்டி நகரசபை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு கலந்து கொண்டார்.