இருசக்கர வாகனத்தில் சென்ற அடகு கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் நகை வழிப்பறி - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

இரு சக்கர வாகனத்தில் சென்ற அடகு கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணத்தை வழிபறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-07 13:38 GMT
வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாநகராட்சி மூன்றாம் திருவிழா மண்டபம் தெருவை சேர்ந்தவர் விமல்சந் (வயது 60). வாலாஜாபாத் அருகே உள்ள கருக்குப்பேட்டை மெயின்ரோடு பகுதியில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம்போல் நேற்று இரவு தனது அடகுக் கடையை பூட்டிவிட்டு, ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கைப்பையில் எடுத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஐயன்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது போன் பேசுவதற்காக இருசக்கர வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தியுள்ளார். அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விமல்சந்தை இருசக்கர வாகனத்துடன் இடித்து தள்ளி உள்ளனர்.

இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். அவர் சுதாரிப்பதற்குள் இருசக்கர வாகனத்தில் மாட்டியிருந்த கைப்பையை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பள்ளியகரம், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (30). இவர் செங்கல்பட்டில் உள்ள வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு, ராஜாஜி தெருவில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து மனோகரன் செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்