பெரியகுளத்தில் பூந்தொட்டியால் தாக்கி நகைக்கடை ஊழியர் கொலை வாலிபர் கைது

பெரியகுளத்தில் பூந்தொட்டியால் தாக்கி நகைக்கடை ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-07 13:19 GMT
பெரியகுளம்:

அடிக்கடி தகராறு

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை குமாரவடிவேல் சந்து பகுதியை சேர்ந்தவர் கவுதம் பாபு (வயது 25). இவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார். எனவே உறவினரான பார்வதி அம்மாள் என்பவர் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.  இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரை பார்வதி அம்மாள் கண்டித்தார். ஆனால் அதனை கவுதம் பாபு கண்டுகொள்ளவில்லை. எனவே பார்வதி அம்மாள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 
இதனால் வீட்டில் தனியாக இருந்த கவுதம்பாபு அவ்வப்போது அவராகவே பேசிக்கொள்வார். மேலும் அடுத்தவர்களிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

பூந்தொட்டியால் தாக்குதல்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை பற்ற வைக்க போவதாக அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களை மிரட்டி உள்ளார். மேலும் தினமும்  குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவர் மீது அக்கம்பக்கத்தினர் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். 
கடந்த மாதம் 27-ந்தேதி கவுதம்பாபுவிடம் பக்கத்து வீட்டுக்காரரான நகைக்கடை ஊழியர் ராமராஜ் (58) என்பவர் சமாதானம் பேசினார். அப்போது கவுதம் பாபு ஆத்திரமடைந்து அருகே கிடந்த பூந்தொட்டியால் ராமராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த ராமராஜ் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சாவு

இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  ராமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். கவுதம்பாபு மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஏற்கனவே தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து பெரியகுளம் சிறையில் அடைத்தனர். தற்போது ராமராஜ் இறந்ததால் கவுதம்பாபு மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். .

மேலும் செய்திகள்