கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள எம்.எச்.தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 37). நெசவுத்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு மாடியில் குடும்பத்தோடு படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு தனியறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை அள்ளிச்சென்றனர்.
அதேபோல அருகே உள்ள ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் முனுசாமி (69) என்பவரும் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றிருந்த நிலையில், அந்த வீட்டின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரத்தை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், மாதர்பாக்கத்தில் வண்ணார் தெருவில் உள்ள தாட்சாயினி (60) என்பவரின் வீட்டை உடைத்து அங்கிருந்த 3 கிராம் நகைகள், வெள்ளி வளையல்கள் மற்றும் ரூ.1,200 ஆகியவற்றை அள்ளிச்சென்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.