மதுரை-லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு கூடலூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

மதுரை-லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2022-05-07 13:12 GMT
கூடலூர்:

மதுரை-லோயர்கேம்ப் இடையே கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி லோயர்கேம்ப் அருகே குருவனூத்து வண்ணான் துறையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்துக்காக நாளைமறுநாள்  (திங்கட்கிழமை) பூமிபூஜை நடத்த பொதுப்பணித்துறையினர் முன்னேற்பாடு பணிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சலவைத்தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சலவைத்தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் முடிவு ஏற்படவில்லை. 
இதையடுத்து கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகில் விவசாயிகள், சலவைத்தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை குருவனூத்து வண்ணான் துறை பகுதியில் இருந்து கொண்டு சென்றால் சலவைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு, வைகை அணையை தூர்வாரி அங்கிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லவேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
இந்த போராட்டத்தில் சலவைத்தொழிலாளர்கள் நல முன்னேற்ற சங்கத்தினர், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் செங்குட்டுவன், தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், இயற்கை வேளாண் விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். 
உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்