கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்திருந்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி

கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்திருந்த போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே அதிரடியாக உத்தரவிட்டார்.

Update: 2022-05-07 12:55 GMT
தேனி:
தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் சிலர் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து கொண்டு சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு ரகசிய புகார்கள் வந்தன. இதையடுத்து அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், போலீஸ்காரர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகிய 3 பேர் ஆயுதப்படை பிரிவுக்கும் தற்காலிக பணி இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அதில், கஞ்சா வியாபாரி ஒருவரை கைது செய்வதற்காக, மற்றொரு கஞ்சா வியாபாரியிடம் இருந்து போலீசாரே கஞ்சாவை கேட்டு வாங்கியதும், அவ்வாறு வாங்கிய கஞ்சாவை போலீஸ்காரர் ராஜா, தனது வீட்டில் வைத்து இருந்ததும் தெரியவந்தது. அதையொட்டி போலீஸ்காரர் ராஜா வீட்டில் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மற்றொரு வியாபாரி மீது பொய் வழக்கு போடுவதற்காக அந்த கஞ்சாவை போலீசாருக்கு கொடுத்த கஞ்சா வியாபாரி ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் ராஜாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், மற்ற 2 போலீஸ்காரர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்