மதுபோதையில் தகராறு: நண்பரை அடித்து கொன்ற வாலிபர்

குன்றத்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-07 10:20 GMT
பூந்தமல்லி, 

குன்றத்தூர், மேத்தா நகர் பகுதியில் வசித்து வந்தவர் தியாகராஜன் (வயது 33). அதேபோல் குன்றத்தூர், ஒண்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன் (36). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியில் உள்ள காலி இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கண்ணன் கல்லால் அடித்ததில் தியாகராஜன் மயங்கி விழுந்தார். அவரை அங்கேயே விட்டு, விட்டு கண்ணன் சென்று விட்டார்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள், தியாகராஜன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு, குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தியாகராஜனை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தியாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்