எடப்பாடி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட 21 சாயப்பட்டறைகள் அகற்றம்
எடப்பாடி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட 21 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன.
எடப்பாடி:
எடப்பாடி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட 21 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன.
அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
எடப்பாடியில் ஜலகண்டாபுரம் ரோடு, பூலாம்பட்டி ரோடு, நைனாம்பட்டி மற்றும் வெள்ளாண்டி வலசு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் சென்று ஆய்வு நடத்தினார்கள்.
இந்த குழுவில் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பறக்கும்படை என்ஜினீயர் செல்வகுமார், உதவி என்ஜினீயர்கள் நித்திய லட்சுமி, கிருஷ்ணன், எடப்பாடி வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இடம்பெற்றிருந்தனர்.
21 சாயப்பட்டறைகள்
தொடர்ந்து மேற்கண்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 21 சாயப்பட்டறைகள் அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு 21 சாயப்பட்டறைகளும் இடித்து அகற்றப்பட்டன. மேலும் 2 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால் அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் 2 சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்றனர்.